உள்ளூர் செய்திகள்
தார் சாலையின் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்

பாணாவரம் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலை தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-04-20 15:46 IST   |   Update On 2022-04-20 15:46:00 IST
பாணாவரம் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலை தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சி சேந்தமங்கலம்& மகேந்திரவாடி வழியாக வெளிதாங்கிபுரம் மோட்டூர் ஊராட்சிக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 3.03 கி.மீ நீளத்திற்கு புதியதாக போடப்பட்டுள்ள 2 அடுக்கு தார் சாலையின் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு நேற்று மாலை ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது சாலையில் 4 கல்வெட்டு, கழிவுநீர் கால்வாய், 180 மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் துகள்கள் பயன்படுத்தி சாலை போடப்பட்டுள்ளது. இதனை நேரடியாக பார்வையிட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். 

இந்த சாலையில் ஒரு சதுர அடிக்கு 110 கிராம் பிளாஸ்டிக் துகள்கள் வீதம் என சுமார் 1250 கிலோ பிளாஸ்டிக் துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் 2 புறமும் மண் கொட்டப்பட்டு சாலை அரிப்பில்லாமல் தரமாக அமைக்கப்பட்டுள்ளது என பொறியாளர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். 

தார் சாலையின் சாய்வு தளம் எவ்வளவு என்பதை சமதள மாணியை வைத்து ஆய்வு செய்தால் சாய்தளம் 2 பக்கத்திற்கும் சுமார் 3 சதவீதம் வரை இருக்கலாம் ஆய்வுக்கு பின் சரியான அளவிற்கு உள்ளது என கண்டறியப்பட்டது. 

தார் சாலையில் ஒரு சதுர அடிக்கு தோண்டி எடுத்து தார்சாலை 20 மி.மீ. தடிமன் உள்ளதா என பரிசோதித்து உறுதி செய்தனர். பின்னர் தார்சாலை அனைத்து பொருட்களுடன் தாரின் அளவு எவ்வளவு என்பதை 0.5 கி.கி அளவு எடை போட்டு ஜல்லி கற்களுடன் தார் கலந்துள்ள அளவு எவ்வளவு என்பதை பரி-சோதனை எந்திரத்தை கொண்டு பரிசோதனை செய்தனர். 

ஜல்லி கற்கள் மற்றும் தார்களை துண்டுகளாக உடைத்து அதை இயந்திரத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தாரினை பிரித்து எடுத்து முழுமையாக பிரித்தெடுத்த பின்னர் ஜல்லி கற்கள் அளவீடு செய்யப்பட்டு 0.48 கி. கி எடை கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. சுமார் 4 சதவீதம் அளவிற்கு ஜல்லி கற்களுடன் கலக்கப்படுகிறது. இறுதியில் அளவீடு செய்து கணக்கிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. 

இதனை ஒவ்வொன்றாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளவு செய்து ஆய்வு செய்தார். பின்னர் உரிய தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகரன்,  அரிகிருஷ்ணன், உதவி பொறியாளர் சுஜா, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News