உள்ளூர் செய்திகள்
டோலிகட்டி நோயாளியை தூக்கி வந்த காட்சி.

டோலிகட்டி நோயாளியை தூக்கி வரும் அவலத்தை தடுக்க மலைக்கிராமத்தில் தற்காலிக ஆஸ்பத்திரி

Published On 2022-04-19 15:53 IST   |   Update On 2022-04-19 15:53:00 IST
டோலிகட்டி நோயாளியை தூக்கி வரும் அவலத்தை தடுக்க மலைக்கிராமத்தில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி அதிக மலை கிராமங்களை கொண்டதாகும். சுமார் 20- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மலை கிராமங்களுக்கு சாலை வசதி என்பது இன்னமும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது. இதனால் கர்ப்பிணிகள், நோய்வாய் படுபவர்களை மலை கிராமங்களுக்கு கீழே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு டோலி கட்டி தூக்கி வரும் நிலையே தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் மலை பகுதியை சேர்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் வனப்பகுதிக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கண்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

வெள்ளக்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்-சவுந்தர்யா தம்பதியினர், லட்சுமணன் உயிரிழந்த நிலையில் சவுந்தர்யா (31) பிள்ளைகளோடு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

நேற்று அப்பகுதி மக்கள் டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரம் வெள்ளக்கல்லில் இருந்து குருமலை வரை வனப்பகுதிக்குல் தூக்கி வந்தனர். பின்னர் குருமலையில் இருந்து வேன் மூலம் அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதேபோல கடந்த ஆண்டு கர்ப்பிணி பெண் ஒருவர் டோலி கட்டி தூக்கிசெல்லப்பட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் குருமலை பகுதியில் நேரில் ஆய்வு செய்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 படுக்கையுடன் கூடிய தற்காலிக துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து கொடுத்து, அரசு கட்டிடம் கட்ட நிதியும் ஒதுக்கியிருந்தார்.

ஆனாலும் இது போன்ற அவல நிலை அவ்வப்போது தொடர்வதால் மலை வாழ் மக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். தங்கள் மலை கிராமங்களுக்கு விரைந்து சாலை அமைத்துகொடுக்க வேண்டும், குறிப்பாக மலையில் நிரந்தரமான மருத்துவருடன் கூடிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த ஆண்டே குருமலையில் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கியும் ஆனால் இதுநாள் வரை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கவில்லை.

அரசு கட்டிடம் கட்டி அதில் மருத்துவரோடு கூடிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டால் இது போன்ற அவல நிலை தொடராது என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் குருமலை அரசு பள்ளியில் இன்று முதல் தற்காலிக ஆஸ்பத்திரி அமைக்க உத்தரவிடப்பட்டது. இதில் ஒரு டாக்டர், நர்சு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Similar News