உள்ளூர் செய்திகள்
நெமிலி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
நெமிலி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வழக்கம் போல வீட்டில் சாப்பிட்டு விட்டு தன்னுடைய நிலத்திற்கு சென்றார். அப்போது பயிருக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
இதனை கண்ட பக்கத்து நிலத்துக்காரர் உடனடியாக அங்கே சென்று மயங்கி கிடந்த பெருமாளை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெருமாளின் மனைவி கன்னியம்மாள் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்-பெக்டர் மோகன், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் பெருமாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.