உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது- கலெக்டர் ஆர்த்தி பெருமிதம்

Published On 2022-04-18 12:44 IST   |   Update On 2022-04-18 12:44:00 IST
கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் முதல்- அமைச்சரால் 03.08.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் உள்ள 47 முதுநிலை கோயில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோயில்களில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டு, அதில் கோயில்களில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், ஆகிய விவரங்கள் பத்தர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ் மொழியிலேயே இறை வனைப் பாடிப்பரவினர். எனவே தாய் மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர்கள் சொல்வதை பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும் என்பதாலும் தமிழில் போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்படஉள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனை செய்யப்படுவதை கேட்டு அகமகிழ்வார்கள். எனவே அடுத்தக்கட்டமாக 536 கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் நகர் தேவராஜ சுவாமி கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டமானது செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டு பக்தர்களின் பேராதரவைப் பெற்று, அனைத்து பக்தர்களும், இறைவனின் திருப்புகழை அறியும் வண்ணம், பக்தி தமிழை மென்மேலும் வளர்த்திடும் சீரிய நோக்குடன் இத்திட்டமானது சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதனால் கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும், இறைவனுக்கு, தங்களது தாய் மொழியாம் தமிழ் மொழியில், அர்ச்சனை செய்யப்படுவதை காது குளிரக் கேட்டு, அதன் பொருள் அறிந்து, மெய் மறந்து வழிபடுகின்றனர், இதனால் இத்திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்று, வெற்றித்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News