உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான ஆடுகள்.

சாத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற 38 ஆடுகள் வாகனம் மோதி பலி

Published On 2022-04-18 10:54 IST   |   Update On 2022-04-18 10:54:00 IST
சாத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற 38 ஆடுகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த வெள்ளை சாமி என்பவரிடம் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), விக்னேஷ் (25) என்ற இரு சகோதரர்கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாத்தூர் அருகில் உள்ள உப்பத்தூர் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆடுகளை சகோதரர்கள் இருவரும் கிடைபோட்டு மேய்ச்சல் செய்து வந்தனர். அங்கிருந்து ஏழாயிரம் பண்ணை செல்வதற்காக நேற்று நள்ளிரவில் ஆடுகளை ஓட்டிச்சென்றனர்.

உப்பத்தூர் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 38 ஆடுகள் பலியானது. 12 ஆடுகள் படுகாயம் அடைந்தன.

சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News