உள்ளூர் செய்திகள்
.

கன்டெய்னர் லாரியில் எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு

Published On 2022-04-17 06:12 GMT   |   Update On 2022-04-17 06:12 GMT
கொண்டலாம்பட்டி அருகே கன்டெய்னர் லாரியில் எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு போனது.
சேலம்:

அரியானா மாநிலம் பரீதாபாத்தில் கன்டெய்னர் லாரி சேவையுடன் கூடிய தனியார் பார்சல் நிறுவனம் உள்ளது. 

இந்த பார்சல் நிறுவனத்துக்கு சொந்தமான லாரி ஒன்று துர்கானில் இருந்து பிரபல தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு புதுச்சேரிக்கு வந்தது.

பின்னர் அங்குள்ள பார்சல் அலுவலகத்தில் மேலும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கடந்த 12ந் தேதி சேலத்திற்கு அந்த கன்டெய்னர் லாரி புறப்பட்டு வந்தது. 

இதையடுத்து கொண்டலாம்பட்டி அருகே எஸ்.நாட்டாமங்கலம் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனம் நடத்தி வரும் அலுவலகத்தின் அருகே 13ந் தேதி அந்த கன்டெய்னர் லாரி வந்து நின்றது.

இந்த நிலையில் லாரி மட்டும் ரோட்டில் நீண்ட நேரமாக நின்று இருப்பதை பார்த்த அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் லாரி டிரைவரை தேடி பார்த்தனர். ஆனால் லாரியை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அவரது தந்தை இம்ரான் ஆகிய இருவரும் மாயமாகி விட்டனர். 

இந்த நிலையில் இவர்கள் இருவரிடமும் நிர்வாகத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை அவர்கள் எடுக்கவில்லை. 

இதுபற்றி தகவல் தெரிந்தவுடன் புதுச்சேரியில் இருந்து அந்த பார்சல் லாரி நிறுவனத்தின் சூப்பர்வைசராக பணிபுரியும் சந்தீப் (வயது 32) என்பவர் வந்து கன்டெய்னர் லாரியின் கதவை திறந்து பார்த்தபோது அதில் ஏற்றி வந்த 47 பாக்ஸ் திருடப்பட்டு உள்ளதாக தெரியவந்தது

அந்த பாக்சில் செல்போன் மற்றும் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 65 ஆயிரம் என தெரியவந்தது. 

இதுகுறித்து அந்த பார்சல் நிறுவனத்தின் அரியானாவை சேர்ந்த ஊழியர் சந்தீப் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான டிரைவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News