உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

மணல்மேடு அருகே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2022-04-16 17:54 IST   |   Update On 2022-04-16 17:54:00 IST
மணல்மேடு அருகே மினி வாட்டர் டேங்க் பழுதடைந்ததால் தண்ணீர் இன்றி தவித்த பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .
மணல்மேடு:

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த கொண்டல் ஆற்றங்கரை தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வசதி வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆற்றங்கரை தெருவில் மினி வாட்டர் டேங்க் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த மினி வாட்டர் டேங்கின் மோட்டார் பழுதடைந்தது. தொடர்ந்து அந்த மோட்டாரை பழுது நீக்கம் செய்து தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு பல கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டியிருந்தது.

மேலும் சுகாதாரமற்ற முறையில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பம்புசெட் குடிநீரை பருகி வந்தனர் இந்நிலையில் மோட்டாரை பழுது நீக்கம் செய்து மீண்டும் தங்களுக்கு குடிநீர் வழங்க வலியுறுத்தி கொண்டல் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென கொண்டல் கடைவீதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்க வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்தை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

இதனால் மணல்மேடு - மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மணல்மேடு போலீசார் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News