உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தி இழப்பை தவிர்க்க செயற்கை உலர் கலன்கள் உருவாக்கித் தர வேண்டும்

Update: 2022-04-16 09:48 GMT
மழைக்காலங்களில் தென்னை நார் உற்பத்தி இழப்பை தவிர்க்க செயற்கை உலர் கலன்கள் அமைத்து தர வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை: 

நாடு முழுவதும் தென்னை நார் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. 

தென்னை மற்றும் அதனை சார்ந்த 2000 தொழிற்சாலைகளை கொண்டு 60 சதவீத உற்பத்தி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தான் வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

ஆண்டு தோறும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 2000 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதியும், உள்நாட்டு வர்த்தகம் 12,000 கோடி அளவிற்கு நடப்பதாக தென்னைநார் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

கடந்த 2018-&19&ம் நிதி ஆண்டில் அமெரிக்காவிற்கு ஒரு கன்டெய்னர் ஏற்றுமதிக்கு 3000 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நான்கு மடங்கு ஏற்றுமதி கட்டணம் உயர்ந்து 15,000 ரூபாய் என ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பல நிறுவனங்களில் உற்பத்திப் பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், மூலப் பொருளாக மட்டும் 90 சதவீத ஏற்றுமதி ஆவதாகவும், மூலப்பொருளாக கண் டெய்னரில் ஏற்றும்போது 24 டன்  எடை கொண்டதாக உள்ளது.

இதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி  ஒரு கண்டெய்னரில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக  மாற்றி  அமைத்து அதனை ஏற்றுமதி செய்தால் இந்த ஏற்றுமதி விலை உயர்வை உற்பத்தியாளர்கள் சமாளித்துக் கொள்ளலாம் என பல உற்பத்தியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். 

மேலும் மழைக்காலங்களில் தென்னைநார் உற்பத்தி பாதிப்படைந்து பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், எனவே அரசு இதை கருத்தில் எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு செயற்கை உலர் கலன்ங்களை அமைத்துக் கொடுத்தால் இந்த பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பிலிருந்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் காப்பாற்றபடுவார்கள். 

எனவே மத்திய மாநில அரசுகள் இதை கருத்தில் கொண்டு ஆய்வுகளை நடத்தி செயற்கை உளர் கலன்ங்களை அமைத்து தர தென்னை நார் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News