உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

மல்பெரி செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பட்டு வளர்ச்சிதுறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்

Published On 2022-04-16 12:24 IST   |   Update On 2022-04-16 12:24:00 IST
பட்டுப்புழுக்களுக்கு உணவாக வழங்கப்படும் மல்பெரி இலைகளே தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதியில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில்  நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பகுதியில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளுக்கு கர்நாடகா மாநிலம் ராம்நகர் உள்ளிட்ட பிற மாநில கொள்முதல் மையங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. 

இதற்கு உடுமலை பகுதியில், நிலவி வரும் சீதோஷ்ண நிலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு உகந்ததாகவும், நூற்புத்திறன் அதிகமுள்ள கூடுகள் இப்பகுதியில் உற்பத்தியானதும் முக்கிய காரணமாகும்.

பட்டுப்புழுக்களுக்கு உணவாக வழங்கப்படும் மல்பெரி இலைகளே தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. எனவே உடுமலை பகுதியில் மல்பெரி தோட்ட பராமரிப்புக்கு தனிக்கவனம் செலுத்தி வந்தனர். 

சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, உர மற்றும் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

மேலும் மத்திய பட்டு வாரியம், மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில்  மல்பெரி தோட்ட பராமரிப்பு குறித்து கிராமம்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. நோய்த்தடுப்பு பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தொடர் மழை, அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால், மல்பெரி செடிகளில் நோய்த்தாக்குதல் அதிகரித்து வருகிறது. 

தரமில்லாத இலைகளை, புழுக்களுக்கு உணவாக வழங்கினால் அவையும் பாதிப்புக்குள்ளாகும். நீண்ட காலமாக பராமரிக்கப்படும் மல்பெரி தோட்டங்களிலும், நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. 

எனவே பட்டு வளர்ச்சித்துறை சார்பில், தரமான மல்பெரி இலைகள் உற்பத்திக்கான கலந்தாய்வு கூட்டங்களை கிராமந்தோறும் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

இதனால் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் முன்னிலை என்ற நிலையை உடுமலை பகுதி தக்க வைக்க முடியும். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News