உள்ளூர் செய்திகள்
மாவிளக்கு ஊர்வலத்தில் மோதல்: புதன்சந்தை அருகே 9 பேர் மீது வழக்கு
புதன்சந்தை அருகே மாவிளக்கு ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி ஊராட்சியில் அரசமரத்து காலனி உள்ளது.
இங்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் அந்த மாவிளக்குகளை முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
அப்போது மற்றொரு தரப்பினருக்கும், அரசமரத்து காலனி தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அதுமோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டதில் அரசமரத்து காலனியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுவன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.
இந்த நிலையில் சிறுவன் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், ஊர்வலம் செல்ல மாற்றுப்பாதை வசதி செய்து தர வலியுறுத்தியும் புதன்சந்தையில் உள்ள சேந்தமங்கலம் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவர்களிடம் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மோதல் சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த மாதையன்(வயது42), கவுதம்(19), மாதேஸ்(41), முருகேசன்(42), தீனா(21) ஆகியோர் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே மோதம் சம்பவம் எதிரொலியாக புதன்சந்தையில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளன.