உள்ளூர் செய்திகள்
கைது

சாத்தான்குளம் பகுதியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 15 லட்சம் நிலம் மோசடி- முதியவர் கைது

Published On 2022-04-14 06:25 GMT   |   Update On 2022-04-14 06:25 GMT
சாத்தான்குளம் பகுதியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 15 லட்சம் நிலம் மோசடி செய்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா கருங்கடல் பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை அவரது இறப்பிற்குப் பின், அவரது மனைவி விமலா என்பவரிடமிருந்து காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜன் என்பவர் கிரையம் பெற்றுள்ளார்.

ஜேசுராஜன் பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்யாமல் இருந்ததால், பட்டா தங்கதுரை என்ற பெயரிலேயே இருந்துள்ளது.

இதையறிந்த கருங்கடல் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் (68) என்பவர் சிலருடன் சேர்ந்து வேறொரு தங்கதுரை என்பவரை வைத்து, பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து தனது பெயருக்கு 2010-ம் வருடம் போலியாக கிரையப்பத்திரம் பதிவு செய்து ஜேசுராஜனின் சுமார் ரூ. 15 லட்சம் மதிப்புடைய சொத்தை மோசடி செய்துள்ளார்.

இந்நிலையில் ஜேசுராஜன் இறந்துவிட்டதால் அவரது மகன் ராஜீவ் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள சொத்து மோசடி கிரையம் செய்யப்பட்டதையறிந்து போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. சம்பத் மேற்பார்வையில் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதாராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், விஜயகுமார், பிச்சையா, சரவண சங்கர் ஆகியோர் அடங்கிய போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் மோசடி கிரையம் பெற்ற பொன்ராஜ் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் இதில் சம்மந்தப்பட்ட மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News