உள்ளூர் செய்திகள்
இறந்து கிடந்த வாலிபரை படத்தில் காணலாம்.

ஓட்டல் தொழிலாளி கழுத்தில் கயிற்றை இறுக்கி படுகொலை

Published On 2022-04-13 15:02 IST   |   Update On 2022-04-13 15:02:00 IST
ஓட்டல் தொழிலாளி கழுத்தில் கயிற்றை இறுக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் பழனியப்பா கார்னர் அருகில் உள்ள வணிக வளாக வாசலில் கழுத்தில் கயிறு சுற்றியுள்ள நிலையில் வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார். அந்த வழியாக நடை பயிற்சி சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக அவர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்றும், அப்பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததும், தற்போது ஒரு உணவகத்தில் வேலை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கழுத்தில் கயிறு சுற்றப்பட்டு இருந்ததால் யாராவது கழுத்தை நெறித்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அவரது இடுப்பு உள்ளிட்ட இடங்களிலும் காயங்கள் தென்பட்டன. எனவே அவரது மரணத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 வணிக நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அந்த வாலிபர் இறப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 இறந்து கிடந்த வணிக வளாகத்திற்கு எதிரே உள்ள திரையங்கில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது. அதற்காக விஜய் ரசிகர்கள் இரவு நீண்ட நேரம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் விசாரித்தாலும்

இதுகுறித்து தகவல் கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News