உள்ளூர் செய்திகள்
இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம்
விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுவதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.
இதனை தடுக்க வாரம் ஒரு முறை சம்பள ரசீது வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புறத்தில் மட்டுமில்லாமல் நகர்ப்புறத்திலும் பணி வழங்க வேண்டும்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பல குடும்பங்கள் படகில் வரத்தொடங்கி உள்ளனர். அங்கு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடக்க வெகுநாட்கள் இல்லை.5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏறாமல் இருந்தது.
ஆனால் தேர்தல் முடிந்த பின் அவற்றின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறது என மத்திய அரசு பொய் சொல்கிறது.
மருந்து மாத்திரைகள் விலைகளும், சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.