உள்ளூர் செய்திகள்
ஆட்டோ எப்.சி. கட்டண உயர்வை திரும்ப பெற கோரி ரங்கசாமியிடம் மனு அளித்த போது எடுத்த படம்.

ஆட்டோ புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் ரங்கசாமியிடம் மனு

Published On 2022-04-13 11:19 IST   |   Update On 2022-04-13 11:19:00 IST
ஆட்டோ புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்கத்தினர் ரங்கசாமியிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி:

புதுவை மாநில ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் சேதுசெல்வம், ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆட்டோ புதுப்பித்தல் கட்டணமாக ரூ.700  செலுத்தப் பட்டது. இதனை,  திடீரென ரூ. 4 ஆயிரத்து 600 ஆக உயர்த்திக்கட்ட அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. 

இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

இதோடு, இன்சூரன்ஸ் கட்டணமாக ஆட்டோ ஒன்றுக்கு ரூ 8 ஆயிரம், சாலை வரியாக ரூ ஆயிரத்து 500 கட்ட வேண்டிய நிலை உள்ளது. இதுமட்டுமின்றி,  ஆண்டுதோறும் ஆட்டோ எப்.சி. எடுப்பதற்கு முன்பு  டிங்கரிங், பெயிண்டிங், லைனர் வேலை, மெக்கானிக் கூலி என ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது உள்ளது. 

இதனிடையே பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டு  ரூ.104 விற்கப்பட்டு வருகிறது. இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும்  வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலை,  தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். 

எனவே, உயர்த்திய எப்.சி. கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு ஆந்திராவை போல் புதுவை அரசும் ஆண்டுதோறும் ஆட்டோக்களுக்கு எப்.சி. எடுப்பதற்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்க வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆட்டோ சங்க நிர்வாகிகள் பிரகாஷ், தேவநாதன், சசி, நடனமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

Similar News