உள்ளூர் செய்திகள்
மீனவர்கள்

தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம்- நாளை நள்ளிரவு தொடங்குகிறது

Published On 2022-04-13 05:22 GMT   |   Update On 2022-04-13 05:22 GMT
மீன்பிடி தடைகால நிவாரணம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடிதடை காலம் நாளை நள்ளிரவு முதல் தொடங்க உள்ளது. திருவள்ளூர், சென்னை, கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய கிழக்கு கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வரை மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வருகிறது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கிழக்கு கடற்கரையோர பகுதிகளுக்கும் இந்த மீன்பிடி தடைக்காலம் பொருந்தும். அதேவேளையில் நாட்டுப்படகுகள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்துக் குள் சாதாரண வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை ஏதும் இல்லை.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தினமும் 1200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி தடை காலம் நாளை நள்ளிரவு தொடங்குவதை யொட்டி அனுமதி இல்லாததால் 61 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள்.

இந்த 61 நாட்களிலும் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பழுது பார்த்தல், மீன் வலைகளை பழுது பார்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுபவார்கள். அதேவேளையில் குறைந்த தூரம் செல்லும் நாட்டுப் படகுகளில் மட்டும் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள். இதனால் இந்த 61 நாட்களும் சிறியவகை மீன்களே கிடைக்கும். இதன் காரணமாக மீன் விலையும் அதிகரித்துவிடும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 543 விசைப்படகுகள் கடலுக்கு சென்று மின்பிடித்து வருகின்றன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 250 விசைப்படகுகள் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாளை நள்ளிரவு முதல் மீதமுள்ள படகுகளும் மீன்பிடிக்க செல்லாது.

மீன்பிடி தடைக்காலம் முடிவதற்குள் மீன்பிடி துறைமுகத்தின் ஆழப்படுத்தும் பணிகளை முடிக்க வேண்டும். மேலும் மீன்பிடி தடைகால நிவாரணம் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து இயங்கும் விசைப்படகுகளுக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகள் மேற்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவை. எனவே அந்த பகுதிக்கு மீன் பிடி தடை பொருந்தாது.

இந்த மீன்பிடி தடை காலத்தின்போது தடையை மீறி மீன்பிடி தொழில் செய்பவர்கள் மீது தமிழ் நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசைப்படகின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் மானிய டீசலும் நிறுத்தப்படும் என்றும் மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags:    

Similar News