கூடுவாஞ்சேரி அருகே ரெயில்வே மேம்பாலத்தில் டிராக்டர் மோதி தொழிலாளி பலி
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி நகராட்சி வள்ளுவர் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(41) டிரைவர். இவர் தனது டிராக்டரில் ரக்பீஸ் ஏற்றிக்கொண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கூலித்தொழிலாளி சரவணன்(35) என்பவர் அருகில் உட்கார்ந்து கொண்டு சென்றார்.
கூடுவாஞ்சேரி ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது அங்கிருந்த வேகத்தடையை கண்டதும் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
இதில் சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார் அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். டிரைவர் கீழே விழுந்து லேசான காயத்துடன் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினார்.
விபத்துக்குள்ளான டிராக்டர் வெளியே மேம்பாலத்தின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தரத்தில் தொங்கிய டிராக்டரை மீட்டனர். இதுகுறித்த சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.