உள்ளூர் செய்திகள்
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்.

கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி

Published On 2022-04-10 15:05 IST   |   Update On 2022-04-10 15:05:00 IST
புதுக்கோட்டை அருகே மறமடக்கியில் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மறமடக்கி பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோவில் திடலில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு விழாவுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கலெக்டர் கவிதா ராமு, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் மகேஷ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து போட்டிகள் தொடங்கின. முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதனை யாரும் பிடிக்கவல்லை. இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க தகுதி வாய்ந்த களத்தில் இறக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டனர். இதில் ஒரு சில காளைகள் தன்னை நெருங்க விடாதவாறு வீரர்களுக்கு போக்கு காட்டி விளையாடியது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள், மஞ்சள் பையுடன் பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை மறமடக்கி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News