உள்ளூர் செய்திகள்
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மாமரங்கள்.

குடியாத்தம் அருகே 2-வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம்

Published On 2022-04-10 14:55 IST   |   Update On 2022-04-10 14:55:00 IST
குடியாத்தம் அருகே 2-வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஆந்திர மாநில வனப் பகுதிக்குள் விரட்டினர். 

அந்த யானைகள் கூட்டம் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதிக்குள் அருகே உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.  வனத்துறையினர் விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகள் கூட்டத்தை அடர்ந்த ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

கூட்டத்தை விட்டு பிரிந்த 2 யானைகள் கடந்த சில தினங்களாக குடியாத்தம் அடுத்த மோர்தானா, சைன குண்டா, ஆம்பூராம்பட்டி, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, மோடி குப்பம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது நேற்று விடியற்காலை மோர்தனா செல்லும் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலகிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் மாந்தோப்புக்குள் யானைகள் புகுந்து ஏராளமான மாமரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் முருகன் உள்ளிட்ட வனத் துறையினர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது அதன் சற்று தொலைவில் காவல்துறையின் சோதனை சாவடி உள்ளது இதன் அருகே யானைகள் வந்து பிளிறியபடி இருந்தது இதனால் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர் மேலும் கிராமத்திற்கு அருகே யானைகள் முகாமிட்டு தொடர்ந்து பிளிறியபடி இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இன்று 2&வது நாளாக யானை அட்டகாசம் செய்தன.

குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவிலிருந்து மோர்தானா கிராமத்திற்கு சுமார் 9 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும் இரவு நேரங்களில் யானைகள் கூட்டம் வனப்பகுதியில் சாலையை கடந்து செல்லும் சில நேரங்களில் சிறுத்தைகளும் கடந்து செல்லும்.

கடந்த சில தினங்களாக மாலை வேலையில் 2 யானைகள் மோர்தானா கிராமத்திற்கு செல்லும் சாலையில் மூங்கில் புதர் அருகே முகாமிட்டு சுற்றி வருகின்றன. சாலையின் குறுக்கே பல நிமிடங்கள் நின்று பிளிறியபடி இருப்பதாகவும் இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே வனத்துறையினர் மோர்தானா கிராமத்திற்குச் செல்லும் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் போது கிராம மக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தனியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News