உள்ளூர் செய்திகள்
சிறப்பான ஆட்சியால் மு.க.ஸ்டாலினை உலகமே பாராட்டுகிறது- தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. பேச்சு
சிறப்பான ஆட்சியால் மு.க.ஸ்டாலினை உலகமே பாராட்டுவதாக ராணிப்பேட்டையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. பேசினார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் மாவட்ட தி.மு.க. சார்பில் அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். ராணிப்பேட்டை நகர பொறுப்பாளர் பூங்காவனம் வரவேற்றார்.
கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பேசியதாவது:&
பெண் சிங்கங்கள் வேட்டையாடி இறைச்சி எடுத்து வந்து அதை ஆண் சிங்கம், குட்டி சிங்கங்கள் உண்ணும்.இது போன்று தான் மகளிர். இது இந்தியாவிற்கே விடிவுகாலம். ராணிப்பேட்டை மாவட்டம் எனக்கு தாய் வீடு மாதிரி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.
அவரை உலகமே பாராட்டி வருகிறது. தி.மு.க.வில் அமைச்சர் காந்தி விசுவாசமிக்க ஒரு படைவீரர். இவர் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் ரூ.26 கோடி மதிப்பில் மேம்பாலம், சோளிங்கர் நரசிம்மர் கோவில் ரோப் கார் திட்டம் தொடங்கி வைத்தார். திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்தது தி.மு.க. தான். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கி உள்ளார்.
நெமிலியில் வார சந்தை, திமிரியில் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கையின் வழியில் தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்திருக்கிறார்.
இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தயாரித்த நிதிநிலை அறிக்கை அல்ல. இது முதல்வர் தயாரித்த நிதிநிலை அறிக்கை. இது ஒரு தொலைநோக்கு நிதிநிலை அறிக்கை ஆகும். தமிழ்நாடு முன்னேற்றமாக திகழும்.இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை கழக பேச்சாளர் கவிஞர் நன்மாறன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முன்னதாக அதிமுக, பாமக, பாஜக என பல்வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் கண்ணையன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், வாலாஜா ஒன்றிக்குழு தலைவர் சேஷா வெங்கட், ஒன்றிய செயலாளர் ஏ.கே.முருகன், வாலாஜா நகர பொருளாளர் தில்லை, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணிதில்லை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணை செயலாளர் குமார், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்ட முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.