உள்ளூர் செய்திகள்
வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
வேலூர்:
வாணியம்பாடியை சேர்ந்தவர் முனீர். இவர் வேலூர் கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். இதில் பிளாஸ்டிக் கழிவுகளை பவுடராக தயாரித்து அதனை ஏற்றுமதி செய்து வந்தார்.
இதற்கு பயன்படுத்தப்படும் அரவை எந்திரங்கள் இந்த குடோனில் உள்ளன. அரவை செய்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு குவித்து வைத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென பிளாஸ்டிக் கழிவுகளில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
காட்டுத்தீ போல குடோன் முழுவதும் பரவியது. இதனால் அங்கு புகைமண்டலம் எழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் காட்டுத் தீ போல கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து காட்பாடியில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவு நச்சுப் புகை எழுந்தது.பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். 2 மணியிலிருந்து காலை 8 மணி வரை 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எந்திரங்கள் உள்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வில்லை. இது குறித்து விசாரித்து வருகின்றனர்.