உள்ளூர் செய்திகள்
நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
நகர் மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம் தலைவர் திலகவதிசெந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் உட்பட அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது என தலைவர் மற்றும் துணைத்தலைவர் தெரிவித்தனர்.
இதற்கு அ.தி.மு.க நகர்-மன்ற உறுப்பினர்கள் சேட் என்கிற அப்துல்ரகுமான் தலைமையில் 100 சதவீதம் சொத்துவரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அதே போல் அ.ம.மு.க. உறுப்பினரும் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
பின்னர் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில் பெரும்பான்மையான உறுப்பினர் தண்ணீர் பிரச்சினை பற்றி பேசினார்கள். இதற்கு துணைதலைவர் பதில் அளிக்கையில் தற்போது உள்ள பிரச்சினையில் 5நாள் அல்லது 10 நாட்களுக்குதான் தண்ணீர் தரம் நிலை உள்ளது.
விரைவில் இப்பிரச்சினை முடிக்கபட்டு இரண்டு தினங்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கும் ஒரு ஆறு மாதமோ, ஒரு வருடமோ ஆகும் என்றார்.
2வது வார்டு உறுப்பினர் மதியழகன் பேசுகையில் வார்டில் எந்த பகுதிக்கு எந்த தண்ணீர் வாழ்வு என தெரியாத காரணத்தினால் மக்களுக்கு சரியாக பதில் கூறமுடியவில்லை. எனவே எந்த பகுதிக்கு எந்த தண்ணீர் வாழ்வு என்பதை உறுப்பினர்களிடம் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
42வது வார்டு உறுப்பினர் கவிவேந்தன் பேசுகையில் தண்ணீர் பம்ப் ஆப்ரேட்டர்கள் அ.தி.மு.க.வினர் கட்டுபாட்டில் உள்ளனர். இதனால் நான் தி.மு.க உறுப்பினராக இருந்தும் ஆளும் கட்சியில் எந்த செயலையும் செய்யமுடியவில்லை. எனவே பம்ப் ஆப்ரேட்டர்களை மாற்றம் செய்யவேண்டும்.
மேலும் பழைய அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்-பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதே போல் 1வது வார்டு, 19வது வார்டு 34வது வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.