உள்ளூர் செய்திகள்
வாலாஜா நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த காட்

வாலாஜா அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-04-09 15:39 IST   |   Update On 2022-04-09 15:39:00 IST
வாலாஜா அருகே அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் நவ்லாக் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்-கலையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணை 211.48 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான பழகன்றுகள் மற்றும் வீரிய ஒட்டுரக காய்கறி நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதற்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

இதில் மா, தக்காளி, மிளகாய் மற்றும் மூலிகை செடிகள், தேங்காய் கன்றுகள் மற்றும் குரோட்டன்ஸ் செடிகள் போன்ற செடிகள் வளர்க்கப்படுகின்றன. 

மேலும் அரசு தோட்டக்கலை பண்ணையில் மாந்தோட்டம், முந்திரி தோட்டம், சப்போட்டா தோட்டம் போன்ற மரங்கள் வளர்க்கப்பட்டு செடி ஒட்டுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

அதேபோன்று தோட்டக்கலை பண்ணையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் ஒரு லட்சம் பதியம் போடப்பட்டுள்ள தென்னை நாற்றுகள் வளர்ப்பு முறைகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். 

பண்ணையிலுள்ள சோலார் டிரையர், மிஸ்டு சேம்பர், நிழல் வலை குடில், பசுமைகுடில் ஆகியவற்றை பார்வையிட்டு மா செடியில் ஒட்டு கட்டும் முறைகளையும் பக்க ஒட்டு குருத்து ஒட்டு கட்டும் செயல் முறைகளையும் பார்வையிட்டார்.
 
அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள கத்திரி, தக்காளி, மிளகாய் பயிர்கள் செயல் விளக்கத்தையும் பார்வையிட்டு கேட்டறிந்தார்.இங்கு தக்காளி, மிளகாய், கத்திரி ஆகியவை இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றது. இதனை விவசாயிகள் பார்வையிட்ட பின்னர் அவர்களுக்கு நாற்றுகள் வழங்க ஏதுவாக இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

அரசு தோட்டக்கலை பண்ணை தோட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்திட பயிற்சி கூட்டரங்கம் ஒன்று தேவை என கலெக்டரிடம் துணை இயக்குனர் கேட்டுக் கொண்டார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்-ளப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, தோட்டக்கலை துணை இயக்குனர் லதா மகேஷ், தோட்டக்கலை அலுவலர் நீதிமொழி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அருண் பாபு, மோனிஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News