உள்ளூர் செய்திகள்
பாணாவரம் காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளுக்கு தொட்டியில் தண்ணீர் நிரப்பும் சமூக ஆர்வலர்கள்
பாணாவரம் காப்புக்காடு பகுதியில் வன விலங்குகளுக்கு சமூக ஆர்வலர்கள் தொட்டியில் தண்ணீர் நிரப்பினர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் ஆற்காடு வனச் சரகத்திற்கு உட்பட்ட சுமார் ஆயிரத்து 28 ஏக்கர் பரப்பளவில் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், காட்டுப்பன்றி, முயல், நரி, உள்ளிட்ட வன உயிரினங்கள் உள்ளன.
இந்த வன விலங்குகள் கோடை காலத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படி தண்ணீர் தேடி வரும் மான் உள்ளிட்ட விலங்குகள் காப்புக்காட்டை ஒட்டி அமைந்துள்ள ரெயில்வே தண்டவாளங்களில் சிக்கி அடிக்கடி விபத்து ஏற்பட்டு இரவு நேரத்தில் உயிரை விடுகின்றன.
இந்நிலையில் வன விலங்குகளின் உயிரை காப்பாற்றும் பொருட்டு அதே பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன் பொதுமக்கள் உதவியுடன் பாணா வரம் காப்புக் காட்டில் 4 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து விலங்குகளுக்கு கோடை காலத்தில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தச் செயலை கண்ட அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசனை பாராட்டி வருகின்ரனர்.