உள்ளூர் செய்திகள்
விபத்து நடைபெறும் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி

வண்டலூர் அருகே கல்குவாரிகளுக்கு செல்லும் லாரிகளால் தொடர் விபத்து- அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார்

Published On 2022-04-09 13:38 IST   |   Update On 2022-04-09 13:38:00 IST
கல்குவாரி பகுதிகளிலிருந்து அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக இயங்கும் லாரிகளால் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அமைக்க வனத்துறையினர் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

வண்டலூர்:

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையோரத்தில் உள்ள கல்குவாரி பகுதிகளிலிருந்து சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் லாரிகளால் நல்லம்பாக்கம் கூட்டு ரோட்டில் மணல் திட்டு மற்றும் புழுதி காணப்படுவதால் தொடர் விபத்து ஏற்பட்டு வந்தது.

இதில் கடந்த மாதம் ஒரு கர்ப்பிணி ஆசிரியை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய கல்லூரி பேருந்தை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீஸ் உயர்அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன் எதிரொலியாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று காலை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, தாம்பரம் ரேஞ்சர் வித்யாபதி, நெடுஞ்சாலைத்துறை மாவட்ட உதவி பொறியாளர் கோமதி, வண்டலூர் துணை தாசில்தார் ராஜா, தாம்பரம் போலீஸ் துணை கமி‌ஷனர் சி.பி.சக்கரவர்த்தி, போக்குவரத்து துணை கமி‌ஷனர் குமார் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் விபத்து நடந்த பகுதி மற்றும் வனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் ஊரப்பக்கம்,நல்லம்பாக்கம் சாலை 14 கிலோ மீட்டர் கொண்டது.

இதில் காட்டூர் முதல் பெரிய அருங்கால் வரை 700 மீட்டரும், இதேபோல் சின்ன அருங்கால் முதல் கீரப்பாக்கத்தில் உள்ள தேசிய எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் வரை 300 மீட்டரும், மேலும் நல்லம்பாக்கம் கிராமம் முதல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் நல்லம்பாக்கம் கூட்டுரோடு வரை 2 கிலோ மீட்டர் கொண்ட சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த சாலை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு 12அடி தார் சாலையாக அமைக்கப்பட்டது. இந்த சாலையில் தாம்பரத்திலிருந்து கொளப்பாக்கம், நல்லம்பாக்கம் வழியாக கீரப்பாக்கம் வரை 55டி என்ற 2 மாநகர பேருந்துகள் இயங்கி வந்தது.

இதில் ஒரு வழி சாலையான ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையில் கல்குவாரி மற்றும் கிர‌ஷர்களுக்கு இயங்கி வந்த லாரிகளால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2006-ம் ஆண்டு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் இருவழி சாலையாக நெடுஞ்சாலைத்துறை அமைத்தது. இதில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலையை அமைக்க இருமடங்கு இடம் கொடுத்ததால்தான் சாலை அமைக்க அனுமதி கொடுப்போம் என்று வனத்துறை தொடர்ந்து கூறி வந்தது. இதனால் சாலை அமைக்க முடியாததால் அனைத்து பேருந்துகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.

இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் கல்குவாரி பகுதிகளிலிருந்து அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக இயங்கும் லாரிகளால் நல்லம்பாக்கம் கூட்ரோட்டில் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அமைக்க வனத்துறையினர் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சாலையை அமைக்க நெடுஞ்சாலை துறையினர் கருத்துக்களை தயாரித்து அதனை ஆன்லைனில் பதிவு செய்தால் சாலை அமைக்க நாங்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று எங்களது மேலிடத்திற்கு சட்டப்படி பரிந்துரை செய்வோம்” என்றார்.

மேலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் சிக்னல் அமைக்கவும், சிசிடிவி கேமரா பொருத்தவும், சாலையோரத்தில் மின்விளக்குகள் பொருத்தவும், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதிக வேகத்துடன் செல்லும் டிரைவர்கள் மீது வழக்கு தொடரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

Similar News