உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சி கூட்டம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் சில துளிகள்...

Published On 2022-04-09 06:24 GMT   |   Update On 2022-04-09 06:24 GMT
2022-2023-ம் நிதியாண்டில் 3 டயாலிசிஸ் மையங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.பிரியா மேயராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். இதனால் இந்த ஆண்டு (2022-2023) வரவு-செலவு திட்ட கணக்கை மேயர் முன்னிலையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் நரேந்திரன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

சென்னை மாநகரை அழகுபடுத்தும் 26 நீரூற்றுக்கள்

சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு மண்டலங்களில் தமிழக அரசால் 26 எண்ணிக்கையிலான நீருற்றுக்கள் அமைக்கும் பணிக்கு ரூ.1.29 கோடி நிதி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இரு மாத காலத்திற்குள் மொத்த பணிகளும் முடிக்கப்படும்.

1. எண்ணூர் விரைவு சாலை, சைக்லோன் ஷெல்டர் அருகில்,

2. மஞ்சம்பாக்கம், மணலி, 200 அடி சாலை சந்திப்பு,

3. ஜி.என்.டி சாலை, மூலக்கடை சந்திப்பு,

4. 200 அடி சாலை எம்.ஆர்.எச்.சாலை ரவுண்டானா (டிராபிக் ஐலேன்ட்),

5. பாந்தியன் சாலை,

6. மான்டியத் சாலை மற்றும் ஆர்.கே லட்சுமிபதி சாலை சந்திப்பு,

7. ராஜாஜி சாலை-என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு,

8. பெரம்பூர் நெடுஞ்சாலை (வடக்கு) முரசொலி மாறன் பூங்கா,

9. பெரம்பூர் பாலம் தெற்கு,

10. ஸ்ட்ராஹன்ஸ் சாலை புதிய மண்டலம் அருகில்,

11. சூளை நெடுஞ்சாலை,

12. சி.டி.எச். சாலை சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் எதிரில் அம்பத்தூர் ராக்கி தியேட்டர்,

13. முதல் நிழற்சாலை, புல்லா அவென்யூ சந்திப்பு,

14. ஹடோஸ் சாலை, கல்லூரி சாலை சந்திப்பு,

15. டாக்டர்.பெசன்ட் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகில்,

16. கோயம்பேடு 100 அடி சாலை,

17. ஆற்காடு சாலை, அல்சா டவர் அருகில்,

18. ஆற்காடு சாலை, மண்டல அலுவலகம்,

19. உள்வட்ட சாலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், எதிரில்,

20. ஜி.எஸ்.டி சாலை, சாந்தி பெட்ரோல் பங்க் எதிரில்,

21. மலர் மருத்துவமனை, எல்.பி. சாலை ஆவின் பூங்கா முன்பு,

22. தாலுகா அலுவலகம் சாலை, ராஜ்பவன் முன்பு,

23. எம்.ஜி.ஆர் சாலை மற்றும் தரமணி சாலை சந்திப்பு (தரமணி ரெயில் நிலையம், எஸ்.ஆர்.பி டூல்ஸ் அருகில்),

24.வி.ஜி.பி பூங்கா, பாலவாக்கம்

25. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் எதிரில் பாலத்தின் கீழ்,

26. ஓ.எம்.ஆர் கே.கே சாலை சந்திப்பு.

ரூ.143 கோடி செலவில் குளங்களை மேம்படுத்தும் பணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள குளங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 5 மிகப்பெரிய குளங்கள் புனரமைப்பு பணி ரூ.143 கோடி மதிப்பீட்டில், இந்திய அரசின் அம்ரூட் 2.0 திட்ட நிதியில் இருந்து கீழ்கண்ட இடங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மணலி ஏலி, சாத்தாங்காடு குளம், சடையன்குப்பம் குளம், மாதவரம் பெரிய ஏரி, அண்ணா நெடுஞ்சாலை குளம்.

நடப்பு நிதியாண்டில் இருந்து மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதற்கு ஏதுவாக மண்டலம்-4 மற்றும் மண்டலம்- 6-ல் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதியின் கீழும், மற்ற மண்டலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியின் மூலமும், வருடம் முழுவதும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும்.

டிரோன்கள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.4.62 கோடி

கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த 2022-2023-ம் நிதியாண்டில் 30 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள், 100 எண்ணிக்கையிலான கையினால் எடுத்துச் செல்லும் புகைப் பரப்பும் எந்திரங்கள் மற்றும் 200 எண்ணிக்கையிலான கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும் சென்ற ஆண்டினை போலவே ஆளில்லா வானூர்தி மூலம் கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.4.62 கோடி ஒதுக்கப்படும்.

2022-2023-ம் நிதியாண்டில் 3 புதிய வீடு இல்லாதவர்களுக்கான காப்பகங்கள் கட்டுவதாக தீர்மானிக்கப்பட்டு, அவை ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
   
மேலும் 3 இடங்களில் டயாலிசிஸ் மையங்கள்   

2022-2023-ம் நிதியாண்டில் 3 டயாலிசிஸ் மையங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். மேலும், படிப்படியாக ஒவ்வொரு மண்டலங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் ஏற்படுத்தப்படும்.

மாநகர மருத்துவமனை கட்டிடங்களில் மேற்கூரை கசிவுகளை சரிசெய்தல், இதர கட்டுமானப் பணிகள், பராமரிப்பு மற்றும் மருத்துவமனை கட்டிடங்களின் பழுது பார்க்கும் பணிக்காக 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Tags:    

Similar News