உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் கல்வி, போக்குவரத்து குறித்த நிலைக்குழுகூட்டம் நடந்த காட்சி.

பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2022-04-08 17:34 IST   |   Update On 2022-04-08 17:34:00 IST
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
வேலூர்:

வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் கல்வி போக்குவரத்து நிலைக் குழு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில் கல்வி குழுவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வேலூர் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் தற்போது கொஞ்சம் முன்னேறி வருகிறது. இட மாறுதல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கிராம பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

இன்னும் 10 நாட்கள் மட்டுமே பொதுத்தேர்வு நடத்த கால அவகாசம் உள்ளது. எனவே மீதமுள்ள நாட்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம புறங்களில் உள்ள பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

பள்ளி அங்கன்வாடி மையங்களில் மாவட்ட கவுன்சிலர்கள் ஆய்வு நடத்த வேண்டும். கட்டிட வசதி அடிப்படை வசதிகள் இல்லை என்றால் அது குறித்து மாவட்ட ஊராட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகளில் டவுன் பஸ்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் அந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்லவும் பள்ளி முடிந்ததும் சரியான நேரத்தில் மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

மாவட்ட ஊராட்சி செயலாளர் சரண்யா தேவி, சூப்பிரண்டு ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News