உள்ளூர் செய்திகள்
சமூக வலைதளங்களில் மாணவிகள் போட்டோ வெளியிடக்கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் மாணவிகள் போட்டோ வெளியிடக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீஅபிராமி பெண்கள் கலை மற்றும் அயறிவியல் கல்லூரியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் கே. முருகவேல் அனைவரையும் வரவேற்றார்.
ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மாலதி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைதளங்-களில் நடைபெறும் குற்றங்கள், ஆன்லைன் முதலீடுகள், போலியான ஆப்களில் பெரும் கடன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் எந்தவித காரணத்தை கொண்டும் அவர்களது போட்டோவை பதிவிட வேண்டாம்.
அப்படி பதிவு செய்யப்படும் போட்டோக்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் ஆன்லைன் மூலம் புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டாம்.
இதன் மூலம் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு நேரில் சென்று பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
புகார் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பாலியல் தொந்தரவு அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவ மாணவிகள் காவல் உதவி அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் 60 வகையான பயன்பாடு உள்ளது. இதன் மூலம் சிறு குற்றங்களில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 1930 உதவி எண், காவலன் செயலி, காவல் உதவி செயலி குறித்து விளக்கமளித்து அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.