உள்ளூர் செய்திகள்
நெல்

நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.8.57 கோடி முறைகேடு- சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அம்பலம்

Published On 2022-04-08 15:30 IST   |   Update On 2022-04-08 15:30:00 IST
நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த சிவகுமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

அவர்கள் நடத்திய விசாரணையில் ரூ.8.57 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் தனிநபர்கள் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.8 கோடி அளவிற்கு நெல்கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்துள்ளனர்.

இதன்மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம் தண்டலத்தை சேர்ந்த சிவகுமார், தக்கோலத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனிநபர் எவ்வித நிலம் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.57.82 லட்சம் அளவிற்கு நெல் கொள்முதல் அதிகாரிகளின் உதவியுடன் நெல் விற்பனை செய்து விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய அரசின் ஊக்கத்தொகையை தனிநபர்களும் அரசு அதிகாரிகளும் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஏ.கே.படவேட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Similar News