உள்ளூர் செய்திகள்
டீசல் நிரப்ப கர்நாடகா, புதுச்சேரி செல்லும் வேலூர் லாரிகள்- வாட் வரியை குறைக்க வலியுறுத்தல்
வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 5,000 லாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
வேலூர்:
நாடு முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வேலூரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.112.16-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.102.22-க்கும் விற்பனையானது. இதனால் தினசரி காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள், லாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 5,000 லாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டீசல் விலையேற்றத்தால் லாரி தொழில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், லாரிகளுக்கு சரக்குகள் கிடைப்பதிலும், அவ்வாறு சரக்குகள் கிடைத்தாலும் வாடகையை உயர்த்திப்பெற முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தைவிட கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.9 வரை குறைவாக விற்கப்படுகிறது. அந்த மாநிலங்களில் வாட் வரியை மாநில அரசு குறைத்ததன் காரணமாக இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது. டீசல் நிரப்புவதற்காக தமிழக லாரிகள் கர்நாடகம், புதுச்சேரிக்கு அதிகளவில் சென்று வருகின்றன.
இதுகுறித்து வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் டீசல் லிட்டருக்கு ரூ.102.22-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேசமயம், கர்நாடகத்தில் ரூ.7-ம், புதுச்சேரியில் ரூ.9-ம் டீசல் விலை குறைவாகும். இதனால் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள், கர்நாடக எல்லை வரை தேவையான டீசல் மட்டுமே போட்டுக்கொண்டு சென்று, பின்னர் கர்நாடக மாநில பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பிச் செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் அளவுக்கு டீசல் மிச்சப்படுத்த முடிகிறது.
இதேபோல், புதுச்சேரியையொட்டி உள்ள மாவட்டங்களில் உள்ள லாரிகள், டீசல் நிரப்ப அதிகளவில் புதுச்சேரிக்கு சென்று வருகின்றன.
இதனால் தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தமிழக அரசுக்கும் டீசல் மூலம் கிடைக்கும் வரும் வரி வருவாயில் பெரும் இழப்புதான் ஏற்பட்டு வருகின்றன.
எனவே அண்டை மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் இந்த விலையேற்றம் மக்கள் மீதே பெரும் சுமையாக மாறக்கூடும் என்றார்.