உள்ளூர் செய்திகள்
ஆந்திராவில் செல்போன்கள் திருடி வேலூருக்கு பஸ்சில் வந்த தந்தை, மகன் கைது
ஆந்திராவில் செல்போன்கள் திருடி வேலூருக்கு பஸ்சில் வந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்டியான்பேட்டையில் ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பதியில் இருந்து வந்த அரசு பஸ்சில் சோதனையிட்டனர்.
அதில் திருப்பத்தூர் மாவட்டம் உடைய ராஜபாளையத்தை சேர்ந்த முனியப்பன் (வயது 50) அவரது மகன் ராகுல் (19) ஆகியோர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர்.
அதில் 29 செல்போன்கள் 6 லேப்டாப் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் செல்போன் மற்றும் லேப்டாப் திருடி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்தது தெரியவந்தது. இருவரையும் காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து செல்போன் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தாடை பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது.அவர்களிடம் முனியப்பன், ராகுல் மற்றும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் லேப்டாப் ஒப்படைத்தனர்.