உள்ளூர் செய்திகள்
வண்டலூரில் சரக்கு வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலி
வண்டலூரில் சரக்கு வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வண்டலூர்:
அச்சரப்பாக்கத்தில் இருந்து அசோக் நகர் நோக்கி நேற்று இரவு பனை நுங்கு மூட்டைகள் ஏற்றிய சரக்கு வேன் வந்து கொண்டு இருந்தது. வண்டியை ஆதம் பாக்கத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.
சரக்கு வேனின் பின்பகுதியில் அச்சரப்பாக்கம் அருகே உள்ள திருக்கரணை கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 48), விஜய், அருண், பாரதி உள்பட 13 தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்தனர்.
வண்டலூர் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென சரக்கு வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கார்த்திகேயன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விஜய், அருண் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான கார்த்திகேயன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்தவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.