பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சென்னைக்கு கடத்திய 35 மூட்டை குட்கா பறிமுதல்
வேலூர்:
பெங்களூரிலிருந்து வேலூர் வழியாக சென்னைக்கு குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வர படுகின்றன இதனை தடுக்க சுங்கச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சுமார் 35 மூட்டைகளில் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.
இந்த குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது வேன் டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சாவாய் சிங் (வயது 31) என்பவரை கைது செய்தனர்.
மேலும் குட்கா பொருட்களை வேனுடன் பறிமுதல் செய்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்தனர். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் சுமார் 1000 கிலோ குட்கா போதைப் போதைப் பொருட்கள் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.