உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டினால் கொங்கு மண்டலம் பாலைவனமாகும் - உழவர் உழைப்பாளர் கட்சி எச்சரிக்கை

Published On 2022-04-04 07:42 GMT   |   Update On 2022-04-04 07:42 GMT
காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அமராவதி அணை, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
திருப்பூர்:

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டினால் கொங்கு மண்டலம் பாலைவனமாகும் அபாயம் உள்ளது என்று உழவர் உழைப்பாளர் கட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அமராவதி அணை, கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. நேரடியாக 60 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 1.25 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு தொழில், கறிக்கோழி பண்ணைகள் உட்பட தொழில்களும் பயனடைகின்றன. கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நீர் ஆதாரமாக உள்ளது. அமராவதி அணைக்கு அதிகப்படியான நீர் வரத்தை அளிப்பது, பாம்பாறு நதி. கேரளாவில் இருந்து உற்பத்தியாகும் இந்த நதி, அமராவதி அணையின் நீர் ஆதாரத்துக்கு பிரதானமாக உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நதியின் குறுக்கே அணை கட்ட முயற்சி நடந்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் அணை கட்டும் முயற்சி  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் கொங்கு மண்டலம் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. தமிழக அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறினால் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News