உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் தலைவர் இளமுருகுமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-03 14:55 IST   |   Update On 2022-04-03 14:55:00 IST
புதுக்கோட்டை அருகே வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வானக்கன்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். பட்டியல் இனத்தை சேர்ந்த இவரை, கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதியன்று அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதியினர் அவரின் தந்தை செய்த அடிமை தொழில் செய்ய வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு செந்தில்குமார் மறுத்துள்ளார். இதற்கு அவரை சாதியை சொல்லி இழிவாக பேசி, தகாத முறையில் அடித்தும் துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள முழு ஆடியோ ஆதாரம் உள்ளது.  

இதன் அடிப்படையில் இந்த வன்கொடுமை நடந்த அன்றே வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அதே ஊரை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஒருவரின் அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வன்கொடுமைக்கு துணை போகும் தி.மு.க. ஒன்றிய செயலாளரை கண்டிக்கும் விதமாகவும், நடவடிக்கை எடுக்க தயங்கும் மாவட்ட காவல்துறை விரைந்து   நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார் பாக மாநில செயல் தலைவர் இளமுருகுமுத்து தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தின் நிறைவில் அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மேலும் இதர கட்சி நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினார். முடிவில் செயல் தலைவர் இளமுருகுமுத்து தலைமை உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதில் 300க்கும் மேற்பட்ட பல தரப்பட்ட கட்சியை சேர்த்த வர்கள் கலந்து கொண்டனர்.

Similar News