உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகள்
ஏற்காடு பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
ஏற்காடு:
ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலை ஓரங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தப்பட்டு வந்தன.
இந்த கடைகளால் ஏற்காடு ஏரியையும் அண்ணா பூங்காவும் மறைக்கப்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்ப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தினர். ஒரு சில சாலையோர கடைகள் அவர்களாகவே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தி கொண்டனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதை அறிந்து மீண்டும் அதே இடத்தில் கடைகள் வைக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர்.
அரசின் உத்தரவை மீறி தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்தால் வழக்கு பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.