உள்ளூர் செய்திகள்
ஆந்திர எல்லையில் பஸ், வாகனங்களில் மோப்பநாய் கொண்டு சோதனை
ஆந்திர எல்லையில் கஞ்சா கடத்தலை தடுக்க பஸ், வாகனங்களில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர்.
வேலூர்:
ஆந்திராவில் இருந்து வேலூர் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்டியான்பேட்டையில் ஆந்திராவில் இருந்து வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்களில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தினர்.
அப்போது திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் சோதனையிட்டனர். அதில் கஞ்சா கடத்தி வந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் சம்பவத்தில் இதுவரை மதுரை தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கைதாகி வருகின்றனர்.
இதனால் ஆந்திராவில் இருந்து மதுரை தேனி பகுதிகளுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. எங்கிருந்து யாருக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஆந்திர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆந்திராவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.