உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்.

பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published On 2022-04-02 15:28 IST   |   Update On 2022-04-02 15:28:00 IST
வேதாரண்யம் அருகே பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி 6 மணி நேரம் வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியில் சென்ற ஆண்டு இப்பகுதியில் சாகுபடி செய்துள்ள 519 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருந்தனர்

இவர்களில் 449 விவசாயிகள் வங்கியில் கடன் பெற்றவர்களும், 75 பேர் கடன்பெறத விவசாயிகளும் உள்ளனர். இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்த 75 பேருக்கு இன்றுவரை பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. இதனால் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் போராட்டம் அறிவித்து இருந்தனர். வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் விவசாயிகளை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். ஆனால் நேற்று வரை நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உம்பளச்சேரி ரவி, துளாசபுரம் வெங்கடாசலம் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிவாரணம் கேட்டு வங்கியை காலை முதல் முற்றுகையில் ஈடுபட்டனர்.

தகவலரிந்து வாய்மேடு இன்ஸ்பெக்டர் கன்னிகா சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சமாதானத்தை ஏற்க மறுத்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு துறையில் இருந்து அதிகாரிகள் வர வேண்டும் என வலியுறுத்தினர். சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு பிறகு வேளாண்மைத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் சொன்ன கருத்தை விவசாயிகள் ஏற்கவில்லை. இதனால் வங்கியில் இருந்து விவசாயிகள் கூச்சலிட்டனர்.

போலீசார் விவசாயிகளை சமாதானம் செய்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தனர். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். வங்கியை 6 மணி நேரம் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News