உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பதிவை புதுப்பிக்காத இறால் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-04-02 14:54 IST   |   Update On 2022-04-02 14:54:00 IST
பதிவை புதுப்பிக்காத இறால் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
 
புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் 57 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு, இறால் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    இதனைத் தவிர  5 இறால் பண்ணைகள் பதிவு செய்திட மாவட்ட அளவுக் குழுவினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பதிவு செய்யப்பட்ட அனைத்து இறால் பண்ணைகளில் பதிவு காலம் முடிவுற்றுள்ளது.

எனவே, அனைத்து இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பித்திட வேண்டும். மேலும் எவ்வித பதிவு செய்யப்படாமலும் இறால் பண்ணைகள் இயக்கத்தில் உள்ளதாக அறிய வருகிறது.    இவ்வாறு செயல்படும் இறால் பண்ணைகள் உடனடியாக இறால் வளர்ப்பு பணிகளை நிறுத்தம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு பதிவு செய்யப்படாமல் உரிமம் புதுப்பிக்காமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைச் சட்டம் 2005 பிரிவு 14-ன் படி, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளை உடனடியாக பதிவு செய்திடவும் மற்றும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை புதுப்பித்திடவும் இறால் பண்ணை உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறனர்.

தவறினால் மேற்படி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

Similar News