உள்ளூர் செய்திகள்
கைது

கம்பத்தில் வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர் கைது

Published On 2022-04-02 06:23 GMT   |   Update On 2022-04-02 06:23 GMT
கம்பத்தில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கம்பத்திற்கு கொண்டு வருகின்றனர். மேலும் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க கேரள மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வருகின்றனர்.

காய்கறிகள், ஜவுளி, அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும்போது சிலர் கஞ்சா, போதை பொருட்களை கடத்தி வருகின்றனர். மேலும் கள்ளநோட்டு புழக்கமும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. பெரும்பாலும் விவசாயிகள் கூடும் உழவர்சந்தையில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன.

பெரிய அளவில் இல்லாமல் ரூ.200, ரூ.50 என நோட்டுகளை அவர்கள் மாற்றிச் செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கடை உள்ளிட்ட இடங்களில் கள்ளநோட்டுகள் மாற்ற முயன்ற போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் மீண்டும் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுதவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். கம்பம் சுக்காங்கால்பட்டியில் சோதனை செய்தபோது அங்குள்ள வீட்டில் குணசேகரன் என்பவர் கள்ளநோட்டு அச்சடித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் குணசேகரனை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 என ரூ.86 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளையும் அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குணசேகரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் எப்போதிருந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? குணசேகரன் வேறு ஏதும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா?என போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

கம்பம் பகுதியில் கள்ளநோட்டுகள் அடிக்கடி பிடிபடுகின்றன. குறிப்பாக ஏழை, எளிய மக்களை குறிவைத்து இயங்கும் இந்த கும்பல் சிறிய கடைகள், உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் பணத்தை புழக்கத்தில் விடுகின்றனர். எனவே போலீசார் இதுபோன்ற இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News