உள்ளூர் செய்திகள்
புதுவையில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட ரெயிலில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் இருந்தனர்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட புதுச்சேரி- திருப்பதி ரெயில் மீண்டும் இயக்கம்

Published On 2022-04-02 09:44 IST   |   Update On 2022-04-02 09:44:00 IST
புதுச்சேரி- திருப்பதி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் திருப்பதிக்கு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலானது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

அதன்பின் தொற்று குறைந்து பல ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையிலும் புதுச்சேரி-திருப்பதி ரெயில் இயக்கப்படாமலேயே இருந்தது. இந்தநிலையில் நேற்று முதல் இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

இதன்படி தினந்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் இந்த மெமு ரெயில் இரவு 11 மணிக்கு திருப்பதி செல்கிறது. திருப்பதியில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 12.50 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது.

ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்ட நிலையில் மிகக்குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். விரைவில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயிலானது சின்னபாபுசமுத்திரம், விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், ஒலக்கூர், தொழுப்பேடு, மதுராந்தகம், செங்கல்பட்டு, பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் (கிழக்கு), காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது.

Similar News