உள்ளூர் செய்திகள்
தவளக்குப்பம் அருகே மாணவர்களுடன் கிராம மக்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பத்தை அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆண்டியார்பாளையம், ஆண்டியார்பாளையம் காலனி, பிள்ளையார் திட்டு, கொருக்கமேடு உள்ளிட்ட சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த தனிநபரின் நிலத்தில் வழியாக பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டியநிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் பலமுறை அரசுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரி கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த அரசும் பள்ளிக்கு செல்ல வழி ஏற்படுத்தி தரவில்லை. மாணவர்களின் நலன் கருதி தனிநபர் தனது சொந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வழி ஏற்படுத்தி கொடுத்து வந்துள்ளார்.
பள்ளிக்கு வேண்டிய இடத்தையும் தருவதாக தெரிவித்து இருந்தும், அரசு அந்த இடத்தை கையகப்படுத்தி முறையாக செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வழக்கமாக செல்லும் போது பள்ளிக்கு செல்ல முடியாதபடி வேலி போட்டு தடுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி மாணவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் மாணவர்களுடன் பள்ளி வாசலில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று இடத்தின் உரிமையாளர் வேலியை அகற்றி பள்ளிக்குச் செல்ல வழிவிட்டார். பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.