உள்ளூர் செய்திகள்
வேலூரில் வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொப்பி
வேலூரில் வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொப்பி மற்றும் குளிர்பானங்களை டி.ஐ.ஜி. வழங்கினார்.
வேலூர்:
வேலூரில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனை சமாளிக்க வேலூர் மாநகர பகுதிகளில் பணியாற்றக் கூடிய போக்குவரத்து போலீசார் 150 பேருக்கு தொப்பி மற்றும் தினந்தோறும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.
வேலூர் நேதாஜி மைதானத்தில் டி.ஐ.ஜி ஆனி விஜயா போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகளை வழங்கினார். அவர் பேசியதாவது;
போலீஸ் பிரிவில் போக்குவரத்து காவல் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து சேவை செய்து வருகிறார்கள். வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசார் தங்களது உடல் நலனை பாதுகாக்க வேண்டும்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாட்டின் பேரில் தற்போது அனைவருக்கும் வெயிலை சமாளிக்க கூடிய வகையில் நவீன தொப்பி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தினமும் 2 வேளை மோர் பழச்சாறுகள் போன்றவை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ஏடி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.