உள்ளூர் செய்திகள்
குழந்தைகளின் பெற்றோரிடம் சேமிப்பு கணக்குக்கான அட்டை வழங்கினர்.

50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய தபால்காரர்கள்

Published On 2022-04-01 14:59 IST   |   Update On 2022-04-01 14:59:00 IST
நாகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய 2 தபால்காரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5&ம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் ஆவார்கள். இக்குழந்தைகள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இதனை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியும் நாகை பகுதியை சேர்ந்த தபால் காரர்கள் ராஜேந்திரன், சந்தோஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து, தனது சொந்த செலவிலேயே பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தில் முதல் தவணை தொகை ரூ.250 செலுத்தி, இத்திட்டத்தில் இணைத்துள்ளனர். அதற்கான அட்டையையும் பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கி உள்ளனர்.

இது குறித்து ராஜேந்திரன், சந்தோஷ் ஆகியோர் கூறுகையில், சமூக நல்லெண்ணத்துடன் இதை செய்துள்ளோம். இத்திட்டத்தில் பணம் கட்டி சேர முடியாமல் பலர் உள்ளனர். முதல் தவணையை தொடர்ந்து, ஆண்டிற்கு ரூ.1000 ஆயிரம் கட்டி வந்தாலே போதும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒரு முழுமையாக தொகை கிடைக்கும். எங்களால் முடிந்த இந்த சிறு உதவியை செய்துள்ளோம். இதைத்தொடர்ந்து சிரமம் பார்க்காமல் பெற்றோர்கள் ஆண்டு தோறும் இத்திட்டத்தில் பணம் கட்டி வந்தால் போதும்.

மேலும் இத்திட்டத்தை அனைவரும் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தபால்காரர்களின் இந்த செயலுக்கு தலைமை ஆசிரியை சாந்தி, இடைநிலை ஆசிரியர்கள் விமலா, சவுந்திரவள்ளி மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன், தலைமை அஞ்சல் அதிகாரி திலகவதி, கோட்ட பி.ஆர்.ஐ.பி விஜயராகவன் ஆகியோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை அஞ்சல் அதிகாரி திலகவதியும் நாகை வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் பணம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News