உள்ளூர் செய்திகள்
நீர் மேலாண்மை பிரிவில் அமலோற்பவம் பள்ளிக்கு தேசிய விருது
நீர் மேலாண்மை பிரிவில் அமலோற்பவம் பள்ளிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நீர் மேலாண்மை பிரிவில் புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
மத்திய ஜல்சக்தி துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய நீர் மேலாண்மை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2020-ம் ஆண்டுக்கு 11 பிரிவுகளின் கீழ் 57 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராமம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் மத்திய நீர்வளத்துறை பல கட்ட ஆய்வுகளுக்கு பின் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த நீர் மேலாண்மை பள்ளி என்ற விருதை புதுவை அமலோற்பவம் லூர்து அகாடமிக்கு வழங்கப்பட்டுள்ளது.டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
விழாவில் அமலோற்பவம் பள்ளியின் தாளாளர், நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லூர்துசாமி கலந்து கொண்டு விருதினை பெற்றுக்கொண்டார். அப்போது பள்ளியின் துணை முதல்வர் செல்வநாதன், லூர்து அகாடமியின் உதவி தலைமை ஆசிரியர் அருள் ரொசாரியோ ஆகியோர் உடன் இருந்தனர். விருதுடன் பாராட்டு சான்றிதழ், கோப்பை மற்றும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. இது அமலோற்பவம் லூர்து அகாடமிக்கு கிடைத்துள்ள முதல் தேசிய விருதாகும்.
விருது பெற்றதை தொடர்ந்து பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சாதனை குறித்து பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி கூறுகையில், ‘பெருமைக்குரிய இந்த விருது பெற அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்கள், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் மற்றும் உயிரோட்டம் தந்த மாணவர்களுக்கு மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.