உள்ளூர் செய்திகள்
கொலை

ஆலங்குடி அருகே விவசாயி படுகொலை- சந்தேகத்தில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2022-03-31 17:05 IST   |   Update On 2022-03-31 17:05:00 IST
விவசாயி கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு பிரச்சினை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 40). விவசாயியான இவர் மசால் பொடி அரைக்கும் மில் ஒன்றும் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

சுந்தரமூர்த்தியின் சகோதரர்கள், சகோதரி ஆகிய அனைவரும் ஓரே கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். தினமும் வயலுக்கு செல்லும் சுந்தரமூர்த்தி, அங்கு பணிகளை முடித்து விட்டு பின்னர் தனக்கு சொந்தமான மில்லுக்கு வருவார். இரவு 10 மணி வரை அங்கு இருந்துவிட்டு வீடு திரும்புவார்.

இந்தநிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் சுந்தரமூர்த்தி திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அதுவும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

இதற்கிடையே இன்று காலை ஆலங்குடி-செம்பட்டி விடுதி சாலையில் உள்ள அவருடைய மில்லுக்கு சற்று தொலைவில் சுந்தரமூர்த்தி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் முழுவதும் வெட்டு காயங்கள் இருந்தன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மேலும் சுந்தரமூர்த்தி கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுந்தரமூர்த்தியின் கொலைக்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு பிரச்சினை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News