உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாடியில் இருந்து குதித்த மாணவன் படுகாயம்
குடியாத்தம் அருகே வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார்.
குடியாத்தம்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் தகராறில் ஈடுபடுவது, மது போதையில் பள்ளிக்கு வருவது, ஆசிரியர்களிடம் தகராறு செய்வது, பள்ளி வகுப்பறையில் பொருட்களை சேதப்படுத்துவது என தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.
மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒடுகத்தூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவன் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த விரிவுரையாளர்களை செல்போனில் படம் எடுத்து அதை சக மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது. மாணவன் செல்போன் பயன்படுத்திய தகவல் கல்லூரி விரிவுரையாளர் களுக்கு தெரியவந்தது.
இந்நிலையில் நேற்றும் அந்த மாணவன் கல்லூரி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி விரிவுரையாளர்கள் அந்த மாணவனிடம் இருந்து செல்போனை கைப்பற்றி உங்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து மறுநாள் செல்போனை பெற்றுக் கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
அதன் பின் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று உள்ளது. மாலையில் வகுப்பு முடிந்த பின் மாணவன் செல்போனை கேட்டுள்ளார் அதற்கு விரிவுரையாளர்கள் உங்களது பெற்றோரிடம் தருகிறோம் என கூறியுள்ளார்.
மாலையில் வகுப்பு முடிந்த பின் கல்லூரி மாடியில் இருந்து அந்த மாணவன் திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் கல்லூரி விரிவுரையாளர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் உடனடியாக அந்த மாணவனை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் அந்த மாணவனுக்கு 2 கைகளிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.