உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

வழிப்பாதை சம்பந்தமாக பொதுமக்கள் திடீர் போராட்டம்

Published On 2022-03-31 15:33 IST   |   Update On 2022-03-31 15:33:00 IST
வழிப்பாதை சம்பந்தமாக பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் சாய்நாதபுரம் தனியார் கல்லூரி அருகே வழிப் பாதை ஒன்று உள்ளது. இந்த வழியை சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அந்த பாதையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தனியார் கல்லூரி அருகே உள்ள இடத்தில் அரிச்சந்திரன் சாமி சிலை ஒன்றை பொதுமக்கள் வைத்தனர்.

இந்தபாதை சுடுகாட்டுக்கு செல்லும் வழி என்பதால் அந்த இடத்தில் அரிச்சந்திரன் சிலை வைத்து வழிபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் வைத்திருந்த அரிச்சந்திரன் சாமி சிலையை அப்புறப்படுத்த சென்றனர். அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி உள்ளிட்ட பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அரிச்சந்திரன் சிலையை அங்கிருந்து அகற்றினர்.

பொதுமக்கள் பயன்படுத்த கூடிய சுடுகாட்டு பாதை அந்த பகுதியில் உள்ளது. ஆனால் அவர்கள் சாமி சிலை வைத்திருந்த இடம் பட்டா நிலம்.எனவே சாமி சிலை அங்கிருந்து அகற்றப்பட்ட தாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News