உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விவசாயிகளுக்கு மானியத்தில் மின் மோட்டார்

Published On 2022-03-31 15:16 IST   |   Update On 2022-03-31 15:16:00 IST
மானியத்தில் மின் மோட்டார் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:


அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், பி.வி.சி குழாய் மற்றும் புதிய மின் மோட்டார்கள் மானியத்தில் வாங்க தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் வேளாண் நிலத்தில் நீர்ப் பாசனத்துக்கு பி.வி.சி குழாய் வாங்க ரூ.15,000 மானியமும், நில மேம்பாட்டுக்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு  பதில் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராகவும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராகவும், இதுவரை  தாட்கோ மானியம்  பயன் பெறாத சிறு, குறு  மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் ஏற்கனவே,

தாட்கோ மூலம் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு மற்றும் துரித மின் இணைப்பு  ஆகிய திட்டங்களில் பயனடைந்த வரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

 வேளாண் தோட்டக்கலை  திட்டத்தில் மின் மோட்டார்  பெற மானியம் பெற்றிருந்தால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களின் சாதிச்சான்று, வருமானம் சான்று, குடும்பஅட்டை, இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட் புகைப் படம், சிட்டா, பட்டா, அடங்கல், கூடிய விலைப் புள்ளி ஆகிய ஆவணங்களை கொண்டு தாட்கோ இணையதளத்தில் ஆதி  திராவிட விண்ணப்ப தாரர்களும், பழங்குடியின விண்ணப்பதாரர்களும் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்  என தெரிவித்தார்.

Similar News