உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

Published On 2022-03-31 05:25 GMT   |   Update On 2022-03-31 05:53 GMT
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து செய்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை:

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.  அந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், இருவரையும்   அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. இந்த சம்மனையும், அவதூறு வழக்கையும்  ரத்து செய்யக்கோரி  ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று காலையில் பிறப்பித்தார்.

அதில், மனுதாரரை  கட்சியிலிருந்து நீக்கி பிறப்பித்த அறிவிப்பில் அவதூறு பரப்பும் வகையில் எந்த கருத்தும்  இடம்பெறவில்லை என்பதால், அதன் அடிப்படையில் ஓ.பன்னீரசெல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News