வடநெம்மேலி பாம்புபண்ணை மீண்டும் செயல்பட தொடங்கியது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த பண்ணையில் பாம்பு பிடிக்கும் உரிமம் பெற்ற பெண்கள் 423 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்கள் பிடித்து வரும் பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கப்பட்டு மருத்துவ தேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும். பாம்பு பண்ணையில் விஷம் எடுப்பதை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவது வழக்கம். பல்வேறு வகையை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பாம்புகள் இங்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வனத்துறை பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் இருளர்கள் பாம்பு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் பண்ணையில் இருந்த பாம்புகளையும் காட்டில் விடவேண்டிய நிலை உருவானது. இதையடுத்து வடநெம்மேலி பண்ணையில் இருந்த பாம்புகள் அனைத்தும் வெளியே விடப்பட்டன. இதனால் பாம்பு பண்ணை மூடப்பட்டது.
இதற்கிடையே இருளர்கள் பாம்பு பிடிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. இது தொடர்பாக நேற்று அரசு அரசாணையும் வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதி இருளர்கள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து பண்ணைக்கு கொண்டு வந்தனர்.
பண்ணை ஊழியர்கள் பாம்பின் வகை, அதன் எடை, போன்றவற்றை கணக்கிட்டு அதற்கான தொகையை இருளர்களிடம் வழங்கினர். தற்போது 12 பாம்புகள் பண்ணையில் உள்ளது.
பாம்புகள் மீண்டும் கொண்டு வரப்படுவதையடுத்து வடநெம்மேலி பாம்பு பண்ணை இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் பாம்புகளில் இருந்து விஷம் எடுக்கப்படுவதை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதி வழங்கப்படும் என்று பண்ணை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... உக்ரைனின் மைகோலைவ் நகரில் அரசு கட்டிடம் மீது ஏவுகணை தாக்குதல்: 12 பேர் பலி